காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாகூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தனவேலு, கடந்த சில நாள்களாக அதிருப்தியுடன் செயல்பட்டுவந்தார். இந்நிலையில், திடீரென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீதும், அவரது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் மீதும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்துப் புகார் பட்டியலைக் கொடுத்தார்.
ஏற்கனவே, புதுச்சேரி முதலமைச்சருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுவந்த நிலையில் இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனவேலு எம்எல்ஏவை தகுதிநீக்கம் செய்யக்கோரி கடந்த மாதம் 30ஆம் தேதி மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, இது தொடர்பாகச் சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட்ராயருடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் அரசு கொறடா அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, ஒரு பதில் அளிக்கக்கோரி தனவேலு எம்எல்ஏவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை பெற்றுக்கொண்ட தனவேலு எம்எல்ஏ தனது வழக்கறிஞர்களுடன், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து விளக்கக் கடிதம் கொடுத்தார்.
இதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த தனவேலு, “சபாநாயகர் சிவக்கொழுந்து சந்தித்து புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்துள்ள புகார் மனு தொடர்பில் என் தரப்பு விளக்கத்தை அளிக்க இன்று புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்தேன்.
எனது மீதான புகார்கள் தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது, என்னையும் அங்கே அவ்விசாரணையில் அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் எனது வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்துவார்கள். இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க : சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை என்.ஐ.ஏ. விசாரிக்கக் கோரி வழக்கு!