ஹரியானாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்பாயங்களில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிராக வழக்குரைஞர்கள் சமீர் ஜெயின், சந்தீப் பஜாஜ், அங்கத் சந்து, சுவக்யா அவஸ்தி மற்றும் ஆனந்த் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “ஹரியானா அதிகாரப்பூர்வ மொழி சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது. மாநில அரசு இந்தி மொழியை தன்னிச்சையாக திணிக்கிறது” என கூறப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை (ஜூன்8) விசாரணைக்கு வந்தது.
மனுதார்கள் தரப்பில் வழக்குரைஞர் சமீர் ஜெயின் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், “ஹரியானாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். அவர்கள் இந்தி பற்றி நன்கு அறிந்திருக்க மாட்டார்கள். ஆகையால், இந்தி மொழியை மட்டுமே அனுமதித்தால் வழக்குரைஞர்கள் தங்கள் தொழிலை சுதந்திரமாக கடைப்பிடிக்க முடியாது” என்ற கருத்தை முன்வைத்தார்.
இதையடுத்து வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “சில மாநிலங்களில் துணை நீதிமன்றங்களின் அதிகாரபூர்வ மொழியாக இந்தியில் எந்த தவறும் இல்லை. 80 விழுக்காடு மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் புரியவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் துணை நீதிமன்றங்களில் வடமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.
இதற்கிடையில், “ஹரியானா நீதிமன்றங்களில் ஆங்கில மொழியை பயன்படுத்த முடியாவிட்டால், அதற்கு விளக்கம் தேவை” என்று என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டார். இதையடுத்து, “மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மாநில அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்தத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
ஹரியானா அலுவல் மொழி சட்டம் 1969இல், அம்மாநில அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மே-11ஆம் தேதி வெளியான அறிவிக்கையில், “தீர்ப்பாயங்கள் உள்பட ஹரியானாவின் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும்” கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக மாநிலங்களவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல்!