முன்னாள் இந்திய குடிமைப் பணி அலுவலர்களான கே.பி. ஃபபியன், எம்.ஜி.தேவசகாயம், மீனா குப்தா, சோமசுந்தர் புர்ரா, அமித் பாதுரி, மது பாதுரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில்,"ஜனவரி மாதத்தில் உலக சுகாதார அமைப்பால் கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்டது. அந்த கொடும் தொற்றுநோய் இந்தியாவுக்குள் பரவுவதைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உலகளாவிய மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியதோடு, மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் மூலம் நாட்டை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
பேரிடர் காலக்கட்டத்தில் நாட்டு மக்களை பாதுகாக்க முன்னெடுக்க வேண்டிய தேசிய திட்டத்தை வகுப்பது, பாதிக்கப்படக்கூடிய சமூகப் பிரிவினருக்கு குறைந்தபட்ச நிவாரணங்களை வழங்குவது, தற்காப்பு வழிகாட்டுதல்களை வழங்குவது உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய சட்டரீதியான கடமைகளை மத்திய அரசு முழுமையாக செய்யத் தவறிவிட்டது.
மார்ச் 18ஆம் தேதி நியமிக்கப்பட்ட தேசிய பணிக்குழுவை கலந்தாலோசிக்க அரசு தவறிவிட்டது. இது நாடு தழுவிய ஊரடங்கு, முழு முடக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியான நீட்டிப்புகளைச் செய்வதற்கு முன்னர் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் வல்லுநர்களிடம் ஆலோசிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் ஊர்களுக்கும், மாவட்டங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை. வாழ்வாதாரம் இழந்த நிலையில் ஆயிரம் மைல்களை கடந்து நடந்தே ஊரைச் சென்றடைந்த அவர்களால் தொற்று பாதிக்கப்படாத மாவட்டங்களுக்கு வைரஸ் பரவ வழிவகுத்ததற்கு இந்த அரசின் அலட்சியமே காரணம்.
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) போதுமான விநியோகத்தை உறுதி செய்வதில் அரசு காட்டிய தாமதத்தை நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்களின் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். இந்த தொற்றுநோய் தொடர்பான மத்திய அரசின் முன்னெடுப்புகள் குறித்து நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) நடத்திய விசாரணையில் அரசு முழுமையாக முடங்கியிருந்தது என்ற உண்மை வெளியாகியுள்ளது.
தொற்றுநோய் பேரிடர் கால பிரதிபலிப்பு, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கம் பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் செய்ய வேண்டிய எதையுமே மத்திய அரசு செய்யவில்லை. நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயை தடுப்பு நடவடிக்கைகளில் தவறான போக்கைக் கொண்டிருந்த மத்திய அரசை விசாரணைக்கு சுயாதீன ஆணையத்தை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், கரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய் போன்ற அவசரகால சூழ்நிலையில் அரசின் முன்னெடுப்புகளில் நீதித்துறை தலையிடக்கூடாது என்ற உலகளாவிய சட்டவியல் பார்வை இருக்கிறது. எனவே, நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயை கையாள விசாரணை ஆணையத்தை நியமிப்பது தொடர்பில் நீதிமன்றம் தற்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.