புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஆட்சியர், அரசுத் துறை செயலாளர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கனமழை மற்றும் புயல் நேரத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தாழ்வான பகுதிகளில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது, புயலில் சாயும் மரங்களை உடனடியாக அகற்றுவது, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடிசை மற்றும் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டால் நிவாரணம் வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கும்படியும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து 24 மணிநேரமும் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.