கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இருப்பினும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதனிடையே, நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில், ராகுலின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் ஆலோசனையின்படி நேரு-காந்தி குடும்பத்தைச் சாராதவரை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
'நாளைய இந்தியா: அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுடன் ஒரு நேர்காணல்' என்ற புத்தகத்தில் பிரியங்கா காந்தியின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா, "ராஜிநாமா கடிதத்தில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் எங்களில் ஒருவரை (நேரு-காந்தி குடும்பம்) கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என ராகுல் காந்தி பேசிவருகிறார்.
அதில் நான் உடன்படுகிறேன். சுதந்திரமான பாதையில் கட்சி செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். உத்தரப் பிரதேசம் வேண்டாம், அந்தமான நிக்கோபர் தீவுக்குச் செல்லுங்கள் என காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால், அந்த உத்தரவை மகிழ்ச்சியாக ஏற்பேன்" என்றார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை என காங்கிரஸ் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பிரியங்கா காந்தியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!