நொய்டாவின் 50ஆவது செக்டார் மெட்ரோ ரயில் நிலையம், பிரத்யேகமாக திருநங்கைகள் பணிபுரியும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அலுவலர் ரிது மகேஸ்வரி ஞாயிற்றுக்கிழமை (ஜூன்21) கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நொய்டா 50ஆவது செக்டார் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அவர்கள் பிரதான நீரோட்டத்தில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையம் அனைத்து பயணிகளுக்காகவும் திறந்திருக்கும். இங்கு திருநங்கைகள் டிக்கெட் கவுண்ட்டர் முதல் சுகாதார பராமரிப்பு வரை பணியமர்த்தப்படுவார்கள்.
திருநங்கைகளுக்கு பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை முன்னெடுக்கும் வகையில் இந்தத் திட்டம் முழுக்க முழுக்க முன்னெடுக்கப்படுகிறது. இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உதவுகின்றன.
முன்னதாக பெண்களுக்கான வசதிகளைக் கருத்தில் கொண்டு இரண்டு நிலையங்களை நாங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) நிலையங்களாக அர்ப்பணித்தோம். தற்போது ஒரு ரயில் நிலையம் திருநங்கைகளுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு திருநங்கைகளுக்கு தேவையான வசதிகள், அடுத்த ஒரு மாதத்தில் நிறைவடையும்” என்றார்.
இதையும் படிங்க: சீனப் பொருள்களின் பட்டியலைக் கோரும் மத்திய அரசு!