காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், "கடந்த எட்டு நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நாள்தோறும் 15ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவருகிறது. நான்கு மாதங்களுக்கு மேலாக கரோனா அச்சம் இருந்து வரும் நிலையில், சோதனைகளை அதிகரித்தல், பாதிகப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த நம்பகமான திட்டத்தை மோடி அரசு வெளியிடவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் குறித்த தரவுகள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் சுகாதாரத்துறையை விரிவுபடுத்துவதற்கான திட்டமிடல் குறித்த தெளிவும் இல்லை. கோவிட்- 19 ஐ கையாளுவதற்கு விரைவாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது குறித்த திட்டமும் இல்லை" என்று மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த நெருக்கடி காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர் எனத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டதாகவும், மாநில அரசுகளின் தலையில் சுமையைத் தூக்கி வைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியது.
மேலும், நாட்டில் கரோனா சோதனை குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கழகம் நிர்ணயித்த நெறிமுறைகள் மாறிக்கொண்டே இருப்பதாகவும், தரவுகளை சோதனை செய்வதில் எவ்வித நிலைத்த தன்மையும், வெளிப்படைத் தன்மையும் இல்லை எனவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: 'கரோனா பேரிடர், பொருளாதார பாதிப்பு, சீனா மோதல்' - அரசின் கொள்கைகள் விமர்சித்த காங்.!