தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல முக்கிய நகரங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. மழை குறைந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் தண்ணீர் தேங்கியிருக்கும் தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வந்தனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் பலத்த மழை பெய்யத்தொடங்கியதால், ஹைதராபாத்தில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக எல்பி (லால் பகதூர் சாஸ்திரி) நகர், நாகோல் மற்றும் தில்சுக்நகர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிமீ தூரத்திற்கு மக்கள் வாகனத்தில் வரிசைக்கட்டி நின்று கொண்டிருந்தனர்.
பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருந்தால், முன்னெச்சரிக்கையாக பாதைகள் மாற்றிவிடப்பட்டன. மக்கள் அனைவரும் வீடுகளிலே இருக்குபடி காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதிகப்பட்சமாக பந்தலகுடா பகுதியில் 102.3 மிமீ மழை பெய்துள்ளது. அதை தொடர்ந்து, சரூர்நகரில் 93.9 மிமீ, தியன்னாராம் 91 மிமீ, பெடா அம்பர்பேட்டை அனுமன் கோயில் பகுதியில் 89.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.
தெலங்கானா வானிலை மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த நான்கு நாள்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக தெற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தெலங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி அந்தந்த அதிகார வரம்புகளில் உள்ள நிலைமையை கண்காணிக்க அனைத்து காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் மக்களுக்கு அபாயம் ஏற்படலாம் என்பதால் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி மீட்பு பணியில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.