இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கிராமங்களில் மட்டும் சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போதுள்ள நிலைமை குறித்து உயர் அலுவலர்களுடன் அம்மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோதுமை கொள்முதல் தவிர மற்ற வேறு எந்தத் தளர்வுகளும் ஊரடங்கில் மே 3ஆம் தேதிவரை இருக்காது.
அடுத்த வாரம் ரமலான் மாதம் தொடங்க இருந்தாலும் அதற்கென சிறப்புச் சலுகைகளோ அல்லது தளர்வுகளோ வழங்கப்படமாட்டாது. இது தவிர ரமலான் மாதத்தில் வெளியே வர புதிதாக யாருக்கும் பாஸ்கள் வழங்கக்கூடாது.
பொதுமக்களின் உயிரைக் காப்பதே அரசின் தலையாய நோக்கம் என்பதால் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கில் நிச்சயமாக எந்த தளர்வுகளுக்கும் இருக்காது. இருப்பினும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கோதுமை கொள்முதலுக்கு மட்டும் ஊரடங்கு காலத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பின்பற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு அடுத்த வாரம் அறிக்கையை சமர்ப்பிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவுக்கான வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்: அமித் ஷா!