தெலங்கானாவில் உள்ள ஏழை இஸ்லாமிய மக்களுக்கு 2015ஆம் ஆண்டுமுதல் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ரமலான் பரிசுகளை வழங்கிவருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுவரும் சமயத்தில் மக்களுக்குப் பரிசுப் பொருள்களை விநியோகிப்பது தகுந்த இடைவெளியைச் சீர்குலைக்கும்விதமாக அமையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டுவருவதால் பொருளாதார நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன.
2022-21ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகளில் இஃப்தார் இரவு உணவிற்காகவும், ஏழை இஸ்லாமியர்களுக்கு ஆடைகள் விநியோகிப்பதற்காகவும் ரூ. 66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஹைதராபாத்தில் முதலமைச்சர் நடத்தும் வழக்கமான இஃப்தார் விருந்திற்காக ரூ.1.83 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவிருந்த இஃப்தார் விருந்துகள், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி பொது விநியோகத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இது இஸ்லாமியர்கள் அல்லாத ஏழை மக்களுக்கு உதவும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ரமலான் நோன்பிற்காக விநியோகிக்கப்படவிருந்த ஆடைகள், உணவுப் பொட்டலங்களாக பல லட்சம் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சித் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அக்பருதீன் ஓவைசி முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், "ரமலான் பண்டிகை காலத்தில் இஸ்லாமியர்களுக்கு புத்தாடை வழங்குவதற்குப் பதிலாக, ஊரடங்கால் வறுமையில் வாடும் இஸ்லாமியர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்களை வழங்கலாம்" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ தெலங்கானா அரசு உத்தரவு!