குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?
நாம் அனைவரும் இந்தியர்களே. நம் குடியுரிமையை நிரூபிக்க யாரிடமும் எந்தச் சான்றிதழ்களையும் காட்ட வேண்டிய அவசியமில்லை.
ஒருவேளை தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் அதனை முதலாவது ஆளாக தடுத்து நிறுத்துவேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கி முன்பு நீண்ட வரிசையில் நின்று பலர் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்கள் (பாஜக அரசு) மீண்டும் செய்துகாட்ட நினைக்கிறார்கள்.
1907ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ் கொண்டுவந்த குடியுரிமை திட்டத்துக்கு எதிராக காந்தியடிகள் போராடினார். அதேபோன்று, நானும் என்.ஆர்.சி.க்கு எதிராகப் போராடுவேன். அதற்கு ஒப்புதலளிக்க மாட்டேன்.
சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்ற மத்திய அரசிடம் பல அமைப்புகள் உள்ளன. அப்படியிருக்க, நாம் எதற்கு நம் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்?" என்றார்.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - யோகி ஆதித்யநாத்