கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் கரோனாவைக் கட்டுப்படுத்த உதவினாலும், மறுபுறம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கூட கிடைக்காமல் ஆங்காங்கே நோயாளிகள் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் குறித்து, 101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முறையான தகவல் தெரிவித்தால் உதவிகள் செய்யப்படும் என்று கேரள தீயணைப்புத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றும் வரும் கேன்சர் நோயாளி ஒருவருக்கு மருந்து கிடைக்கவில்லை, அதற்கு உதவ முடியுமா என்று நோயாளியின் உறவினர் கேரள தீயணைப்புத் துறையை நாடியுள்ளார்.
இதையடுத்து களத்தில் இறங்கிய கேரள தீயணைப்புத் துறையினர், எம்.வி.ஆர். கேன்சர் சென்டரில் மருந்தைப் பெற்று, நீலகிரியில் சிகிச்சை பெற்று வரும் கேரள நோயாளியின் உறவினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆபத்தான சூழலில் மனிதாபிமானத்துடன் செயலாற்றிய கேரள தீயணைப்புத் துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.