உலக இந்துக்களின் பொருளாதார மாநாடு மும்பையில் நடந்து வருகிறது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியில்தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என இதில் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச முதலமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அசாதுதீன் ஒவைசி, "மீண்டும் தனக்கு அறிவு இல்லை என்பதை யோகி ஆதித்யநாத் நிரூபித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்திற்கு முதலமைச்சராகியுள்ளார். முகலாயரான ஜகாங்கீர் ஆட்சியில் உலக பொருளாதாரத்தின் 25 விழுக்காட்டை இந்தியா பங்களித்தது என வரலாறு கூறுகிறது.
வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றை முதலமைச்சர் படித்திருந்தால் இது தெரிந்திருக்கக் கூடும். இந்த காலத்தில்தான் சீன பொருளாதாரத்தை இந்தியா முந்தியது. இஸ்லாமியர்கள் மீது அவருக்கு வெறுப்புணர்வு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால், வரலாற்றை மாற்ற முடியாது" என்றார்.