இந்திய பொருளாதாரத்தின் தேக்கநிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார். அதன்படி, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மத்திய வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
அப்போது அவர், பொது வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி யூனியன்கள் போராட்டம் நடத்துவது அறியாமையால்தான் எனவும், பொது வங்கிகள் இணைப்பால் யாரும் தங்கள் வேலையை இழக்க நேரிடாது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வங்கி இணைப்பால் எந்த வங்கிகளும் மூடப்படாது என்றும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக திறனுக்காகவுமே பொது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.