ஜம்மு-காஷ்மீருக்கு வழக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதிலிருந்து, பாகிஸ்தான்-இந்தியா இடையே உறவு நலிவடைந்துள்ளது.
இதனிடையே, இன்று காலை செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பளர் முகமது ஃபைஸல்," பாகிஸ்தான் வான்வெளியில் இந்தியா விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிப்பது குறித்து இன்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
இதுதொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய நம் நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ் குமார்,"அண்டை நாடுகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? சுமூகமான வணிகம், பேச்சுவார்த்தை ஆகிவற்றில் தான் ஈடுபடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் இதுவரை அப்படி நடந்துகொண்டதாக தெரியவில்லை. இப்போதாவது பாகிஸ்தான் அண்டை நாடுகளைப் போல சகஜகமாக நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கு தடைவிதிப்பது குறித்து , அந்த நாடு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என ரவீஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் விமானத் துறை விமானிகளுக்கு அனுப்பியிருந்த நோட்டீஸில் காரச்சி வான்வெளி வழியாக ஆகஸ்ட் 28-31 வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என தெரிவித்திருந்தது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தான் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டு, மீண்டும் ஐந்து மாதங்கள் கழித்துதான் (கடந்த ஜூலை மாதம்) திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.