கோவிட்-19 வைரஸ் நாட்டில் சமூகப் பரவலாக மாறவில்லை என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “இதுவரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிக அளவில் இல்லை.
எடுத்துக்காட்டாக ஒரு நாளில் பரிசோதனை செய்யப்பட்ட 16 ஆயிரம் பேரில் 0.2 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 146 அரசு ஆய்வகங்களில் கோவிட்-19க்கான பரிசோதனை நடக்கிறது.
இதுதவிர 67 தனியார் ஆய்வகங்களிலும் கோவிட்-19 பரிசோதனை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரியில், ஒரு ஆய்வகத்துடன் தொடங்கி, பின்னர் 15 ஆய்வகங்கள் வரை உயர்த்தப்பட்டன.
நாங்கள் இதுவரை ஒரு நாளில் 2.5 ஆய்வகங்கள் என்ற கணக்கில் உயர்த்தியுள்ளோம். நம் நாட்டில் இதுவரை சமூகப் பரவல் இல்லை. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடனும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் நடக்க வேண்டும்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பொருத்தவரை, நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மாத்திரைகள் தேவைப்படும் நிலையில் மூன்று கோடி மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. மாத இறுதி வரையிலான தேவைக்கு இந்த அளவே போதுமானது” என்றார்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 412 ஆக உள்ளது. அவர்களில் 503 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர். ஐயாயிரத்து 709 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.