புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி பட்ஜெட் தொடர்பான கோப்பு 40 நாள்கள் ஆளுநர் மாளிகையில் வைத்திருந்து பின்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசுடன் பலமுறை தொடர்பு கொண்டு ஜூலை 16ஆம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் 17ஆம் தேதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, அன்றைய தினமே அவர் ஒப்புதல் தந்துவிட்டார்.
இதனையடுத்துதான் பட்ஜெட் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. விதிமுறைப்படிதான் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட்டது. துணை நிலை ஆளுநர் உடன் மோதல் போக்கு இல்லை. துரதிர்ஷ்டவசமாக தனக்குத்தான் எல்லா அதிகாரமும் உள்ளது போன்று கிரண் பேடி செயல்படுகிறார்.
மானியக் கோரிக்கைகள் குறித்த கோப்புகள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் அரசு ஊழியர்கள் சம்பளம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வு சென்ற ஆளுநர் மருத்துவர்களை சாடிய செயல், அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகில்லை. ஆளுநர் செய்த தவறுக்கு மருத்துவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளேன். ஆளுநரும் வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன்”. எனத் தெரிவித்தார்.