சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ளது கட்னாய் கிராமம். அந்தக் கிராமத்திற்கு சரியான சாலை இணைப்பு வசதிகள் இல்லாததால், ஏதேனும் அவசரம் என்றாலும் ஆம்புலன்ஸ் வரமுடியாத சூழல் நிலவி வருகிறது. இந்தக் கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும், வெளியே வர வேண்டும் என்றாலும் நடுவில் உள்ள ஆற்றைக் கடக்க வேண்டும்.
இதனிடையே அக்கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவைக்கு உறவினர்கள் அழைத்துள்ளனர். சாலை வசதியைக் காரணம் காட்டி ஆம்புலன்ஸ் அக்கிராமத்திற்கு வரவில்லை.
இதனால் உறவினர்கள் ஒரு கட்டையில் கூடைபோன்று அமைத்து கர்ப்பிணியை அமர வைத்து தோளில் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் அருகிலிருந்த மருத்துவமனையில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆற்றின் நடுவே கர்ப்பிணியை தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ பற்றி அம்மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் ஜாவிடம் கேட்கையில், ''மழைக் காலங்களில் மக்கள் பயணம் செய்வதற்கு இந்த கிராமத்தில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது தான் பிரச்னை.
கட்னாய் போன்ற தொலைதூர கிராமங்களுக்கு செல்ல சிறிய வாகனங்களைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஏனென்றால், அப்பகுதிகளுக்கு சிறிய வாகனம் செல்வதற்கு மட்டுமே போக்குவரத்து வசதி உள்ளது. விரைவில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: ஆப்சென்ட்டான ஆம்புலன்ஸ்; அக்கம்பக்கத்தினர் டார்ச்சரால் தள்ளுவண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்!