பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.28) நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியில் தேர்தலை களம் காண்கிறார். பிரதான எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மகனான சிராக் பஸ்வான் தற்போது கட்சித் தலைமை ஏற்று தேர்தல் களம் காண்கிறார். மத்திய பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் கட்சியும், சிராக் பஸ்வான் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் எதிர்த்துப் போட்டியிடவுள்ளன.
பாஜக போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்து நிதீஷ் குமார் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளார் சிராக் பஸ்வான். இந்நிலையில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன் நிதீஷ் குமாரை எதிர்த்து ட்விட்டர் பதிவை சிராக் பஸ்வான் வெளியிட்டுள்ளார். அதில், 'நிதீஷ் குமாருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் பிகாரை பலவீனப்படுத்தி லாலுவின் கட்சியை பலப்படுத்தும்.
தேர்தலுக்குப்பின் பாஜகவை கழற்றிவிட்டு ராஷ்டிரிய ஜனதாதள கூட்டணியில் இணைய நிதீஷ் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு வாக்களித்து நிதீஷ் குமாரை வீழ்த்தினால் பாஜக-லோக் ஜனசக்தி அரசு அமையும்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிகாரை வெல்லப்போவது யாரு? நிதிஷின் பொருளாதார சாதனைகள் என்னென்ன?