2012ஆம் ஆண்டில் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வரும் மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தூக்குத் தண்டனையிலிருந்து தன்னை காப்பாற்றக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, பவன் குப்தா விண்ணப்பித்திருந்த கருணை மனு கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் குற்றவாளிகள் தூக்குத் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து மறுசீராய்வு மனுக்களையும் கருணை மனுக்களையும் தாக்கல்செய்தனர்.
இந்நிலையில், தனக்கென்று வழக்காட வழக்கறிஞர் இல்லை எனக் கூறியதைத் தொடர்ந்து, அவருக்குச் சட்ட உதவி வழங்க டெல்லி நீதிமன்றம் முன்வந்தது. தனது முந்தைய வழக்குரைஞரை நீக்கிவிட்டதாகவும், புதிய வழக்குரைஞரை வழக்கில் ஈடுபடுத்தும் வரை தனக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படுவதை நிறுத்திவைக்க வேண்டுமென மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தாக்கல்செய்ய அனுமதிக்கக் கோரிய குற்றவாளி பவன் குப்தா தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்தது. அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் குறைதீர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அதற்கான விளக்கத்தை அளித்தது.
முன்னதாக, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று பவன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த குறைதீர்வு மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது கவனிக்கத்தக்கது.
மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திகார் மத்திய சிறையில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட டெல்லி நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளபடி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதுதான் சரியான நீதியா?