நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு மனு, கடைசி நிவாரண மனு ஆகியவற்றைத் தாக்கல் செய்துவருகின்றனர்.
இதனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடைசியாக பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் நால்வரையும் தூக்கிலிடக் கூடாது என்று டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும் குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிட அனுமதியளிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில், நால்வரும் ஒரே வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் தனித்தனியே தூக்கிலிட அனுமதியளிக்க முடியாது என்று கூறி நீதிமன்றம் திகார் சிறை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரு வாரத்திற்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆனால் சட்ட நிவாரணங்களைக் காரணம் காட்டி குற்றவாளிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
அதேசமயம் மத்திய அரசும் டெல்லி அரசும் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இன்னும் ஒருவாரம் கழித்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
நிர்பயா என்ற மருத்துவ மாணவி 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். அவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.