டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்பவர் கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனிற்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்சய் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், தூக்குத் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சீராய்வு மனுக்களையும் கருணை மனுக்களையும் தாக்கல் செய்துவருகின்றனர்.
மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்சய், இன்று மீண்டும் கருணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனது முந்தைய கருணை மனு உரிய காரணங்களின்றி நிராகரிக்கப்பட்டதாகக் கூறி மீண்டும் இந்த மனுவை அக்சய் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அக்சய் தாக்கல் செய்துள்ள இந்தக் கருணை மனு குறித்து விளக்கமளிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அவர் தாக்கல் செய்த கருணை மனுவை பிப்ரவரி 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நிராகரித்திருந்தார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு - குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்!