டெல்லியில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-17ஆம் தேதி நள்ளிரவு நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மருத்துவ மாணவி ஒடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
உடலில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் இளஞ்சிறார் என்பதால் அவருக்கு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். மற்றொருவர் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகள் நால்வரும் நீதிமன்றத்தில் ஒருவர் பின் ஒருவர் கடைசி நிவாரண மனுக்களை அளித்தனர். மேலும் இருவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அளித்தனர். இதனால் நால்வருக்கும் நிறைவேற்றப்படவேண்டிய தண்டனை தேதி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
இவ்வாறான சூழலில் நால்வரில் ஒருவர், குற்றம் நடந்தபோது தாம் 18 வயதை எட்டாத இளஞ்சிறார் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனினும் குற்றவாளிகள் தரப்பில் மீண்டும் ஏதேனும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என தெரியவருகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “மறுஆய்வு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கடைசி நிவாரண மனு அளிக்கக் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஏழு நாட்களுக்குள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கவும், அடுத்த ஏழு நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவாக எத்தனை சட்டத்தீர்வுகள் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31), முகேஷ் குமார் சிங் (32) மற்றும் பவன் (26) ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் புதிய மரண உத்தரவுகளை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மனு!