தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், மஹீவா பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது.
இப்புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 140 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும், அச்சமயத்தில் அரபிக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக குஜராத், மகாராஷ்டிராவில் 70 ரயில்களை ரத்து செய்து மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.