சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, அந்நாட்டைத் தாண்டி தற்போது அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவிவருகிறது. அதபோல, இந்தியாவிலும் சுமார் 30 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்பது இத்தாலிய சுற்றுலாப் பயணிகளும் அவர்களது வழிகாட்டியும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பாரம்பரிய இடமான கஜுராஹோவுக்குச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மாலை பேருந்து மூலம் வந்துள்ளனர். முன்னதாக அவர்கள் ரயில் மூலம் ஆக்ராவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிக்கு வந்தனர்.
அவர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதனால் அவர்கள் அங்குள்ள மருத்துவப் பரிசோதனை முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்ப விரும்புவதாக சதர்பூர் மாவட்ட ஆட்சியர் ஷீலேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு டெல்லி செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வந்த அதே பேருந்தில் டெல்லிக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இத்தாலியர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடி வெளிநாட்டுப் பயணம் கொரோனாவால் ரத்து