உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட உணவில் எலி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறியாமல், அந்த உணவை மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் எடுத்துக்கொண்டனர். எலியிருந்த உணவைச் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 9 மாணவர்கள், 1 ஆசிரியர் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர்கள் வீடு திரும்பினர். முன்னதாக, ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது. இதனை, ஜன் கல்யாண் சன்ஸ்தா குழு என்ற தன்னார்வு தொண்டு அமைப்பு தயார் செய்தது.
இதுகுறித்து, ராம் சாகர் திருப்பதி என்ற கல்வியாளர், "உணவில் இறந்த எலி இருந்தது. இது தெரிந்த உடன் உணவு பரிமாறுவதை நிறுத்தி விட்டோம். ஆனால், 9 மாணவர்கள் உணவைச் சாப்பிட தொடங்கிவிட்டார்கள். எனவே, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். உணவை தயார் செய்த தொண்டு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஒரு லிட்டர் பாலில் தண்ணீரைக் கலந்து 81 குழுந்தைகளுக்கு விநியோகம், ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள உப்பு என பல்வேறு அவல சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்தேறின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருப்தி தேசாய் கைது