கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைவதற்காக இந்தியாவில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மற்றும் பாலக்கோடு பகுதியில், இன்று தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
இதில் காசர்கோடு ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் சந்தேகத்திற்குட்பட்ட மூன்று பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையை செய்தனர். இந்த சோதனையில், பல மொபைல் போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மற்றும் சில தொழில்நுட்ப கருவிகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் இதுதொடர்பாக மூன்று பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.