கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸ் மூர்த்தி. இவரின் உறவினர் நவீன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டார்.
இதனால் அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸின் வீட்டினை முற்றுகையிட்டனர். அது திடீரென கலவரமாக மாறியது. இது காவல் துறையினருக்கு தெரிய வரும்போது, வன்முறை சம்பவம் அளவுக்கு மீறியது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகளை என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ஐஏ அமைப்பைப் பொறுத்தவரையில், '' பெங்களூரு வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி தர அலுவலர் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்வதற்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
என்ஐஏ சட்டம் 2008 இன் பிரிவு 6 (4) மற்றும் 8 இன் கீழ் உள்துறை அமைச்சக உத்தரவைப் பின்பற்றி, தீ விபத்து மற்றும் வன்முறை தொடர்பான இரண்டு வழக்குகளின் விசாரணையை என்ஐஏ ஏற்றுக்கொண்டது. அதில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மாநில காவல்துறையினரால் செயல்படுத்தப்பட்டது பற்றியும் விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக என்ஐஏ அமைப்பினர் 12 இடங்களில் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் முசாமில் பாஷா, அந்தக் கலவரத்திற்கு முன்னதாக ஒரு கூட்டத்தை அழைத்து இந்திய மக்கள் முன்னணி மற்றும் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர்கள் வன்முறையைத் தூண்டவும் உத்தரவிட்டார்'' என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த இரு வழக்குகளில் டிஜே ஹல்லி மற்றும் கே.ஜி. ஹல்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அந்த வழக்குகள் அனைத்தும் பொது சொத்து சேதப்படுத்தியது மற்றும் கர்நாடகா அழிவு மற்றும் சொத்து இழப்பு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கு எஸ்டிபிஐ அமைப்பினர் தான் காரணம் என பாஜக அரசு கூறியது. இதற்கு கண்டம் தெரிவித்துள்ள எஸ்டிபிஐ, '' இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சட்டப்பேரவை உறுப்பினரின் உறவினர் நவீன் பதிவைக் கண்டித்து போராட்டம் நடந்தது.
அடையாளம் தெரியாத கும்பல் புலகேஷி நகரின் டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலையங்களைத் தாக்கி, காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட காவல் நிலையங்களின் சொத்துக்களை அழித்தது'' என்றார்.
இதையும் படிங்க: பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடக்கம்!