இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் 2,300-க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு சுமார் 50 செய்தியாளர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செய்தியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது மிகவும் தீவினையான ஒன்று.
செய்தியாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்" எனக் கூறினார்.
அறிகுறி இல்லாத நபர்களிடமும் சோதனை நடத்த வேண்டும் என்பது குறித்துப் பேசிய லவ் அகர்வால், "வைரஸ் தொற்று உள்ளவர்களில் 80 விழுக்காடு நபர்களுக்கு அறிகுறிகள் இல்லை. அல்லது குறைந்த அறிகுறிகளே இருக்கின்றன. மருத்துவப் பரிசோதனையை யாருக்கெல்லாம் நடத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும், "இப்போது நாம் வைரஸ் தொற்று அதிகமாக உள்ள இடங்களையும், வைரஸ் வேகமாகப் பரவும் இடங்களையும் கண்டறிய வேண்டும். இருப்பினும் வைரஸ் பரவும் வேகம் குறைவாகவே உள்ளது" என்றார்.
மாநில, மாவட்ட நிர்வாகத்துடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்ட அவர் புனே, மும்பை ஆகிய நகரங்களுக்கு மத்திய அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளதையும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கரோனா - பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் காப்பீடு!