17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்நிலையில், இன்று மாலை ஏழு மணிக்கு மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இதற்கிடையே, இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான மியான்மர், இலங்கை, நேபாளம், பூட்டான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு மோடி தனது இல்லத்தில் தேநீர் விருந்து வழங்கினார்.
இதில், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், சதானந்தா கவுடா, நிர்மலா சீதாராமன், தர்மேந்தர பிரதான், ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் குமார், வைத்தியலிங்கம் ஆகியோர் இதுவரை பங்கேற்க வில்லை. அதே சமயம் வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, உச்சக்கட்ட பாதுகாப்புடன் குடியரசு மாளிகையில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் சுமார் எட்டாயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக பாதுகாப்பு பணியில் சுமார் 10 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.