பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் கரோனா வைரசால் தாக்கப்படும் செய்தி தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பிறந்து ஆறே நாள்களான இரட்டைக் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மெசானா மாவட்டத்தில் உள்ள மொலிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த மே 16ஆம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அப்பெண்ணுக்கு ஏற்கனவே கரோனா வைரஸ் இருந்ததால் அக்குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா இருப்பது தெரியவந்தது. குஜராத் மாநிலத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கரோனா வைரசால் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறை என மருத்துவர் தாக்ஸினி தெரிவித்துள்ளார்.
மேலும், இரட்டைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவர் கூறினார். மும்பையிலிருந்து மொலிப்பூர் கிராமத்திற்குத் திரும்பிய மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த பெண் உட்பட அக்கிராமத்தில் பலருக்கும் இத்தொற்று பரவியுள்ளது என தாக்ஸினி தெரிவித்துள்ளார்.
பிறந்து ஆறே நாள்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தில் மிக இளம் வயதிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இக்குழந்தைகள் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க: குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?