உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. இதனால், வரும் செமஸ்டரில் அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் வழியாக நடத்த அந்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன.
இந்நிலையில், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை முற்றிலுமாக ஆன்லைனில் மாற்ற முடிவு செய்துள்ளனவோ, அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக, நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்று ட்ரம்ப் அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவு காரணமாக இந்திய மாணவர்கள் பல சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
F1 விசா என்றால் என்ன?
அமெரிக்க கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு F1 விசா வழங்கப்படுகிறது. இந்த வகை விசா பெறும் மாணவர்கள், முழுநேரம் படிக்கும் மாணவர்களுக்கு நிகரான பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் படிப்பை முடித்து, 60 நாள்கள் வரை அமெரிக்காவில் இருக்கலாம். அதற்குள் OPT திட்டத்தின் கீழ், அவர்கள் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
வெளிநாட்டு மாணவர்கள் குறித்த அமெரிக்காவின் புதிய உத்தரவு
எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை முற்றிலுமாக ஆன்லைனில் மாற்ற முடிவு செய்துள்ளனவோ, அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் புதுப்பிக்கப்பிட மாட்டாது என்று ஜூலை 7ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருந்தது.
இது பல்கலைக்கழகங்களில் F1 விசாக்கள் மூலம் படிக்கும் மாணவர்கள், M1 விசாக்கள் மூலம் தொழில்முறை பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு இந்த உத்தரவு முக்கியமானது, ஏன்?
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்கள் அதிகம் என்பதால் இந்த உத்தரவு இந்திய மாணவர்களை அதிகம் பாதிக்கும்.
2019ஆம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் :
- சீனா - 3 லட்சத்து 69 ஆயிரத்து 548 மாணவர்கள்
- இந்தியா 2 லட்சத்து 2 ஆயிரத்து 014 மாணவர்கள்
- தென் கொரியா - 52 ஆயிரத்து 250 மாணவர்கள்
விதிவிலக்கு
மிகக் குறைந்த அளவிலான ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களை இந்த உத்தரவு எவ்வாறு பாதிக்கும்?
ஏற்கனவே F1 விசா பெற்று அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் தாயாகம் திரும்ப வேண்டும். தங்கள் பல்கலைக்கழகம் மீண்டும் வளாக வகுப்புகளைத் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில், வளாக வகுப்புகளில் மீண்டும் தொடங்கும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவர்கள் சேர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதிய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேருகிறார்கள். ஆனால், இந்த உத்தரவுக்குப் பின், மாணவர்கள் வளாக வகுப்புகளைத் தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது மற்ற பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால்?
மாணவர் இந்தப் புதிய உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் வாழ்கை முழுவதும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படலாம்.
தீர்வு
வளாக வகுப்புகளைக் கொண்டுள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் திட்டம்
ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் தங்கள் வளாக வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. சில பிரபலமான பல்கலைக்கழகங்கள் இதற்கான சட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டுள்ளன.
புகழ்பெற்ற எம்ஐடி, ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் ட்ரம்ப் அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
இதையும் படிங்க: சீனாவின் ’கந்துவட்டி கடன்வலை ராஜதந்திரம்’ - தத்தளிக்கும் பின்தங்கிய கடனாளி நாடுகள்