சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்காற்றிடும் ட்விட்டரை அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை உலக அளவில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியத் தகவல்களை பரிமாற்றும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவிடப்படும் குறுஞ்செய்திகள் சில ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறுகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் ட்விட்டரின் சமூக வலைத்தள பக்கமும், மேலாண்மை தளங்களுமான டிவீட் டெக் போன்றவையும் இயங்கவில்லை. குறிப்பாக பகிரும் வசதி போன்ற முக்கியப் பயன்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், பாதிப்பு குறித்து ட்விட்டருக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'ட்விட்டர் மற்றும் ட்வீட் டெக் ஆகியவற்றில் சில பிரச்னைகள் காணப்படுகிறது. அவற்றை நாங்கள் தற்போது சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் இயல்பு நிலை அடையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், கனடா, இந்தியாவில் இருந்து ட்விட்டர் செயல்படவில்லை என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக செயலிழப்புகளை கண்காணிக்கும் அவுட்டேஜ் டாட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வருவதாக ட்விட்டர் கூறியுள்ளது.