நேபாளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, இந்திய பகுதிகளை உள்ளடக்கி நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டதால், தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பலுவதரில் உள்ள நேபாள பிரதமரின் வீட்டில் நடைபெற்ற ஆளும் கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால், பிரதமரின் அவதூறு கருத்துக்கள் குறித்து விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், "பதவியில் இருந்து நீக்க இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது என்ற பிரதமரின் கருத்து அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ராஜதந்திர ரீதியானதும் அல்ல. இந்தப் பேச்சு அண்டை நாடுகளுடனான நமது உறவை சேதப்படுத்தும்" என்றார்.
அதைத் தொடர்ந்து, ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களான மாதவ் குமார், ஜலநாத் கானல், துணைத் தலைவர் பாம்தேவ் கவுதம், செய்தித் தொடர்பாளர் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரும் பிரதமர் ஒலி தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும் அல்லது பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.