இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், பழைய காலனித்துவ உடன்படிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் என்றோ, அதன் அண்டை நாடுகளுடன் ஒரு சர்ச்சைக்குரிய நிலத்தில் உரிமை கோரும் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக ஒரு மசோதாவை நிறைவேற்றி, காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய மூன்று இடங்களை நேபாளத்துடன் இணைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த இந்தியா, நேபாளத்தின் இச்செயலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றுகூட தெரியாமல் குழப்பத்தில் உள்ளது. எல்லை விவகாரத்தில் சீனா தனது ராணுவத்தை உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு நெருக்கமாக நிறுத்தாமல், அதன் குறிக்கப்படாத எல்லைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் பொறுமையைச் சோதித்துவருவது புதிராக உள்ளது.
ஜூன் 15ஆம் தேதியன்று என்ன நடந்தது என்றால், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு குறித்த சீனாவின் நிலைப்பாட்டுக்கு இந்தியா ஒப்புக்கொண்ட விதம், அதை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறது போன்ற விஷயங்கள், எல்லைப் பிரச்னையில் இந்தியாவிற்கு நேபாளம் எவ்வாறு சவால் விடப்போகிறது என்பதில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
இதுபோன்ற நேரத்தில் ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் நேபாளம் ஏன் இவ்வாறு செய்தது, நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப நாடகமாடினாரா பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைத் தடுக்க முயன்று கொண்டிருக்கும் சீனாவால் அது ஊக்கப்படுத்தப்பட்டதா எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
சர்ச்சைக்குரிய பகுதிகளை நேபாளம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகள் சீனாவுடன் தொடர்புடையது போல் தோன்றினாலும், ஒலியின் முடிவானது இந்தியாவுடனான அவரது இறுக்கமான உறவுகளால்தான் அதிகமாகத் தூண்டப்பட்டுள்ளது. அதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
நேபாளத்தின் போர்க்குணத்திற்குக் காரணமாக சீனாவைக் குற்றஞ்சாட்டிய அதே சமயத்தில், ஒலியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை இந்திய ராணுவத் தளபதி நரவானே தவறாகக் கணித்திருந்தார். சில பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஒரு இறையாண்மை கொண்ட நட்பு நாடு சுயமான ஒரு முடிவை எடுக்க இயலாது என்ற கருத்து நேபாளத்தின் ஆளும் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகுதான், இந்தியா உரிமை கோரிய இந்த மூன்று இடங்களையும் முறையாகக் கையகப்படுத்துவதை நேபாள அரசு விரைவாக முன்னெடுத்தது.
நேபாளம் இதுபோன்ற முடிவை எடுக்கும் முன்பு இந்தியா இதுகுறித்து என்ன நினைக்கும் என்பதைப் பற்றியோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதை பற்றியோ யோசிக்கவில்லை. இந்த மசோதா இயற்றப்பட்ட பின்னர்தான், இந்தியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக ஒலி தெரிவித்தார்.
“இப்போது பேச என்ன இருக்கிறது?”, என்று நேபாளத்துக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். இந்தியா மீது நேபாளம் ஏன் இவ்வளவு விரோதப் போக்கை கொண்டிருக்கிறது என்பதையும், சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்கள் ஏன் நேபாளர்களிடையே தோன்றியது, அதன் உள்நோக்கம் என்ன என்பதைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்க இந்திய அரசு முடிவு செய்தால் போதும்.
ஒலியின் நிர்வாகத் திறமை கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கரோனா தொற்றை ஒலி மோசமாகக் கையாண்ட விதத்தினால் இளைஞர்கள் கிளர்ச்சி செய்துவருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. மிக அதிகமான நோயாளிகள் எல்லையைத் தாண்டி வருவதாகக் கூறி ஒலி இந்த விவகாரத்திலும் இந்தியா மீது பழி சுமத்தினார். உண்மை என்னவென்றால், வெகு சிலரே இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குத் திரும்பியிருந்தனர்.
தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, தன்னைக் கவிழ்க்க நடந்த முயற்சிகளின் பின்னணியில் இந்தியா இருந்ததாக அவர் நம்புவதால் ஒலி மத்திய அரசு மீது வருத்தமாக இருந்தார். முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் எதிர்ப்பு கூட இந்தியா தந்த ஊக்கத்தினால்தான் என்று கூறப்பட்டது. நேபாளத்தில் உள்ள எளிதில் அணுகக்கூடிய சீனத் தூதரின் தலையீட்டிற்குப் பிறகு ஒலி அதிலிருந்து தப்பினார்.
தனது பிரதேசமான லிபுலேக் பாஸ் வழியாக கைலாஷ் மானசரோவருக்குச் செல்லும் பாதையை முன்யோசனையின்றி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திறந்துவைத்ததை ஒலி இந்த விவகாரத்துடன் இணைத்தார்.
“வரலாற்று ரீதியாக நேபாளத்திற்குச் சொந்தமான பிரதேசத்தில் இந்தியா கட்டிய இந்த இணைப்புச் சாலை திறக்கப்பட்டுள்ளது. 1816ஆம் ஆண்டின் சுகாலி ஒப்பந்தத்தின்படி, மகாகலி ஆற்றின் கிழக்கே உள்ள பகுதி நேபாளத்திற்குச் சொந்தமானது. எல்லையை நிர்ணயிப்பதில் ‘நிலையான எல்லை’ என்ற கொள்கையைப் பின்பற்ற இரு தரப்பினரும் 1988ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டனர்” என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் சென்ற பின், நீண்ட தூரம் யாத்திரை வரும் யாத்திரிகர்களுக்கு உதவுவதற்காக லிபுலேக்கில் சோதனைச்சாவடி கட்ட முடிவுசெய்ததற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இச்செயல் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களை அணிதிரட்டுவதற்கு மானசரோவர் யாத்திரையைப் பயன்படுத்த இந்தியத் தலைமையின் வெளிப்படையான முயற்சிகள் என்று நேபாளம் கூறியது. மோடியின் கீழ் உள்ள இந்திய அரசு இந்து நாகரிக இணைப்புகளைப் பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் நாட்டின் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்றது.
இந்த முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்து மதம் என்பது ராணா அரச வம்சத்தால் பிணைக்கப்பட்டது என்று நேபாளம் நினைக்கிறது. அதற்காக மாவோயிஸ்டுகள் கடுமையான சண்டையை நடத்தினர். காத்மாண்டுவை இந்து மாநிலமாக அறிவிக்க மறுத்ததால் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு கசந்தது.
2015ஆம் ஆண்டிலிருந்து, நேபாளத்துடனான இந்தியாவின் உறவு இறுக்கமாகிவருகிறது. இருந்தபோதிலும் இதனை இந்திய அரசால் சரிசெய்ய முடியவில்லை.
நிலத்தால் சூழப்பட்ட நேபாள நாட்டை சீனாவோடு இணைத்துப் பார்க்கும் டெல்லியின் போக்கு அந்த நாட்டுடனான எதிர்கால உறவுகளுக்கு அதிகச் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அணுகுமுறை இந்தியா, நேபாளம் இடையே வெவ்வேறு நிலைகளில் உள்ள நெருங்கிய உறவுகளைப் பாதிக்கும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருப்பதால், வேலை தேடும் நேபாள இளைஞர்களை ஈர்க்கக்கூடிய இடமாக இது இருக்காது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்!