ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளை பொய்ப்பிக்கும் விதமாக முடிவுகள் வெளியாகின. பாஜக 70 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 8 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.
முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் பேரனும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா கிங் மேக்கராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுயேட்சைகளின் உதவியோடு பாஜக ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், துஷ்யந்த் சவுதாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் எங்களுக்கு தீண்டத்தகாத கட்சிகள் அல்ல.
குறைந்தபட்ச உதவித்தொகை, ஹரியானா இளைஞர்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு, முதியோர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகப்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் எங்களின் முக்கிய நோக்கம். குறைந்தபட்ச உதவித்தொகை திட்டத்தை யார் செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கே எங்களின் ஆதரவு.
எங்களின் முடிவை ஓரிரு நாட்களில் அறிவித்துவிடுவோம். எக்கட்சியுடனும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சுயேட்சைகளுடன் பாஜக ஆட்சி அமைக்க முயன்றால், அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள். ஆனால் நிலையான ஆட்சி அமைப்பதற்கு ஜனநாயக் ஜனதா கட்சி தேவைப்படும். கூட்டணியாக அல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவேண்டும்" என்றார்.