மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாபில் பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாயிகள் அமைப்பு பிரதமர் மோடியின் உருவபொம்மையை நேற்று (அக்.25) எரித்தனர்.
இதற்கு பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு எதிராக 'வெறுப்பு அரசியலில்' காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
பஞ்சாபில் நடைபெற்ற பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்கும் நாடகம் வெட்கக்கேடானது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நேரு வம்சம் ஒருபோதும் பிரதமர் பதவியை மதித்ததில்லை என்ற உண்மையை அவர்கள் அப்பட்டமாக வெளிப்படுத்திவருகின்றனர்.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் பிரதமரின் அதிகாரம் நிறுவன ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்கள் ராஜஸ்தானிலும், பஞ்சாபிலும் நடைபெற்றுவருகின்றன. இதைப் பற்றி காங்கிரஸ் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. பேச்சு சுதந்திரம் குறித்து மற்றவர்களுக்கு அறிவுரை கூற காங்கிரசுக்கு உரிமையில்லை.
இந்திரா காந்தியின் ஆட்சியில் நடைபெற்ற ஜனநாயக விரோதமான அவசரகால அட்டூழியங்களை நாங்கள் மறக்கவில்லை. பின்னர் வந்த ராஜிவ் காந்தி அரசு பத்திரிகை சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தியதையும் நாங்கள் கண்டோம்.
வறுமையில் பிறந்து பிரதமரான ஒருவருக்கு எதிராக நேரு வம்சம் தனிப்பட்ட வகையில் வெறுப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதேவேளையில் இந்திய மக்கள் அவர் மீது பேரன்பு கொண்டுள்ளனர்.
காங்கிரசின் பொய்யான வெறுப்புப் பரப்புரை தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கத் தொடங்குவர்" என்றார்.