டெல்லி: செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. கரோனா தாக்கம் இன்னும் குறையாததால், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும், குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று (ஆகஸ்ட் 26) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜேஇஇ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ மேம்பட்ட தேர்வு (JEE Advance Examinations) செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பெற்றோர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும், மாணவர்கள், பெற்றோர்களின் அழுத்தம் காரணமாகவே தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தேர்வின்போது கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றும்; மாணவர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.