நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து தீவிரம் அடைந்துவரும் நிலையில், ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர், ஊரடங்கின் காரணமாக கடந்த 35 நாள்களில் ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்தார்.
தற்போது இரு வகையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்ததாக நாம் முன்னேற வேண்டிய வழியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், வரும் நாள்களில் கரோனாவின் தாக்கம் நிலைத்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அனைவரும் முகக் கவசம் அணிவதை வாழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர், மக்களை பாதுக்காக்க மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தற்போதைய விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டபோது, உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் பார்க்க: ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சர் கோரிக்கை...!