நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த சில நாள்களாகவே தினசரி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் புஷ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜேஷ் புஷ்வான், "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எட்டு லட்சத்து 99 ஆயிரத்து 864 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் சுமார் 19.70 லட்சத்தினர், அதாவது 25 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாள்தோறும் சராசரியாக 55 ஆயிரம் பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைகின்றனர். அதேபோல கரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் 10 விழுக்காட்டிலிருந்து 7.72 ஆக குறைந்துள்ளது. நாட்டில் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் இரண்டு விழுக்காட்டிற்குக் கீழ் உள்ளது" என்றார்.
மேலும், தற்போதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே மாதத்தில் ஐம்பது லட்சம் பேர் வேலையிழப்பு!