ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் வடக்கு ரயில்வே ஏற்பாடு செய்திருந்த திகாவாரா-பாண்டிகுய் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2014ஆம் ஆண்டுவரை எவ்வித மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களும் உருவாக்கப்படாத ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதுவரை ஆயிரத்து 433 கி.மீ தொலைவிற்கான ரயில் மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளில் ரயில்வே மின்மயமாக்கல் பணி நடைபெறுவதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.
இந்த ரயில்களை இயக்கிய பிறகு, டீசல் ரயில்கள் நிறுத்தப்படும். இந்த ரயில்கள் மாசுபாட்டை நீக்குவதோடு, குறிப்பிடத்தக்க வருவாயையும் மிச்சப்படுத்தும். புதிய சிந்தனைகளை கொண்டு செயல்படுவதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியன் ரயில்வே சிறந்த சாதனைகளை செய்து வருகிறது.
அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் தற்போது வரை 400 ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் தேநீர் விற்பனை செய்யப்படுகிறது. இவை இன்னும் சில மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தப்படும். இதனால் இந்தியா பிளாஸ்டிக் மாசில்லா நாடாக உருமாறும். அதுமட்டுமின்றி பல்வேறு மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்" என்றார்.
இதையும் படிங்க:"ஆறு ஆண்டுகளில் 18 ஆயிரம் கிமீ" - பெருமிதம் கொள்ளும் பியூஸ் கோயல்