போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தகவல் படி, கடந்த ஒன்பதாம் தேதி கொல்கத்தாவில் நன்கு பேக் செய்யப்பட்ட ஒரு கூரியரை சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்ததில், 11.08 கிலோ கிராம் போதைப்பொருள் ஹாங்காங்கிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், கொல்கத்தாவைச் சேர்ந்த போதைப்பொருள் சப்ளையர் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர் கடந்த பத்தாம் தேதி டம் டம் மற்றும் துர்கா நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷிம் ராய், கிங்பின் ரஞ்சன் மிஸ்ரா ஆகிய இரண்டு முக்கிய போதை பொருள் சப்ளையர்களிடமிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அடிக்கடி ஹாங்காங்கிற்கு போதைப் பொருள்களை கூரியர் மூலம் அனுப்பி வைப்பதும் கண்டறியப்பட்டது.
பின்னர் மாணிக்பாரா பகுதியைச் சேர்ந்த பிஸ்வநாத் தாஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு செய்தபோது தடைசெய்யப்பட்ட இருமல் மருந்து உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்கான எவ்வித ஆவணங்களும் இல்லை. மேலும் இவற்றை யாரிடமிருந்து வாங்கினார்கள், அல்லது விற்பனை செய்தார்கள் என்பதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை.
அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய மருந்து கடைகளில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளுக்கு இதுபோன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டார் எனத் தெரிகிறது.