மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களால் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதனிடையே, சத்தீஸ்கர் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சல்களின் நடமாட்டம் கடந்த சில நாள்களில் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக சிறப்பு அதிரடி படை, மாவட்ட ஆயுத படை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெச்சபால், ஹுரேபால் மலைப் பகுதிக்கு அருகே நக்சல்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்தது. அதில், நகசல் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நக்சல்கள் அடர்ந்த மலைப் பகுதிக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
கொலை செய்யப்பட்ட நக்சலின் பெயர் தஷ்ரு புனேம் எனவும், நக்சல் குழுவில் இரண்டாவது முக்கிய நபராக அவர் விளங்கினார் எனவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் 8 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மலைப் பகுதிக்குள் ஓடி ஒளிந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர்.