90 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட மாபெரும் ஜனநாயக நாடு இந்தியா. புவியியல், கலாசார வேறுபாடுகள் நிறைந்த இந்தியாவில், தேர்தல்களை கையாளுவது பெரும் சிக்கலான விஷயமே.
2021 ஜனவரி 25ஆம் தேதி 10ஆவது தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. புதிய வாக்காளர்களை ஊக்கப்படுத்தி, தேர்தல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்வதே இந்த தினத்தின் நோக்கம் ஆகும்.
தேசிய வாக்காளர்கள் தினத்தின் வரலாறு:
1950 ஜனவரி 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் இந்த தினம் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதன் முந்தைய ஆண்டுகள் மற்றும் இந்த ஆண்டுக்கான நோக்கம்:
2015 - எளிதாக பதிவு செய்வது, எளிதாக திருத்துவது
2016 - அனைத்து மக்களையும் தேர்தலில் பங்குபெறச் செய்வது
2017 - புதிய வாக்காளர்களை ஊக்கப்படுத்துவது
2018 - மதிப்பிடத்தக்க தேர்தல்கள்
2019 - அனைவரையும் தேர்தலில் பங்கேற்கச் செய்வது
2020 - வலிமையான ஜனநாயகத்தை அமைக்க தேர்தல் குறித்த படிப்பினையை ஏற்படுத்துவது
2021 - வாக்காளர்கள் அதிகாரம், விழிப்புணர்வு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துதல்
தேசிய வாக்காளர்கள் தினம் எப்படி கொண்டாடப்படுகிறது:
இந்திய குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு இதே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில், கிட்டத்தட்ட 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஸ்வீப் (SVEEP)
தேர்தல் குறித்த விழிப்புணர்வை பல்வேறு வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வாக்காளர்களின் முறையான கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) எனும் திட்டம் உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் சமூக - பொருளாதார, கலாசார தகுதிக்கு ஏற்ப இத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.
2019 தேர்தல்களில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முந்தைய ஆண்டுகளை விட 2019ஆம் வாக்குப்பதிவு செய்தவர்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்திருந்தது.ஆனால், இந்த கரோனா கால தேர்தல்கள் எப்படி நடத்தப்பட்டது என்பதே நாம் இன்றைய சூழலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
கரோனா காலமும் தேர்தலும்:
கரோனா சூழல் காரணமாக பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. 75 நாடுகள் தங்கள் தேர்தல்களை ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா சந்திக்கப்போகும் தேர்தல்கள் குறித்து கவனிக்க வேண்டியது அவசியம்.
இந்தியாவில் மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
பிகார் தேர்தல் கற்றுத் தந்த பாடம்:
243 தொகுதிகள், 7 கோடி வாக்களர்களை கொண்ட பிகார் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதில் கரோனா வழிமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டன. கடந்த தேர்தலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்ற அலுவலர்கள் பாதியாக குறைகப்பட்டனர். தகுந்த இடைவெளியை பின்பற்றுதல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சானிடைசர் பயன்பாடு, முறையான உடல் வெப்பநிலை சோதனை என கரோனா வழிமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டன.