இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் குனஹல்லிகுட்டி ஆகியோர் டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அக்கட்சி உறுப்பினர்கள் கலவரம் நடைபெற்ற பழைய முஸ்தபாபாத்துக்கு சென்று நிவாரண பொருள்களை அளித்தனர். பின்னர், நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நாட்டில் வகுப்புவாத வன்முறை நிகழக்கூடாது என்பதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. எங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண பொருள்களை வழங்கிவருகின்றனர். கலவரம் நடைபெற்ற இடத்திற்கு நான் சென்றேன். வன்முறையில் சிக்கி உயிரிழப்பு நிகழ்ந்திருந்தால் அக்குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மற்றொரு வகுப்புவாத வன்முறை நாட்டில் நிகழக்கூடாது. இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இடையே சகோதரத்துவம் தொடர வேண்டும். வட கிழக்கு டெல்லியில் 12 மசூதிகளை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம். மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கலவரத்தில் சேதமடைந்த இரண்டு இந்து கோயில்கள் புதுப்பிக்கப்படும். நாம் முதலில் மனிதர்கள், இந்தியர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பேசிய குனஹல்லிகுட்டி, "எங்கள் கட்சி உறுப்பினர்கள் அடுத்ததாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட்டுக்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே காமராஜர் சிலை அமைக்க வேண்டும் - வசந்தகுமார் எம்.பி. கோரிக்கை