நர்மதா அணை விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சோ அந்தோலன் குழுவினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நர்மதா நதிக்கரை அருகே வாழ்ந்துவரும் 32 ஆயிரம் பேர் அந்த இடத்தில் அகற்றப்படுவார்கள் என்பதற்காக அவர்களுக்காக போராடிவரும் நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குஜராத் அரசு நிவாரணம் வழங்கக்கோரி இந்தக் குழு வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து பேசிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கத்தினர், ‘குஜராத்தில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் எங்களது போராட்டத்தை தொடர்வோம்.
மத்திய பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் முன்பு ஆட்சி செய்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தால் பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த அணையை கட்ட நிர்ணயம் செய்த இடத்தைவிட அதிகமான இடத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்’ என்றனர்.