கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றிபெற்றதன் மூலம் எடியூரப்பா முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் வகித்து வந்த மாநில தலைவர் பொறுப்பு காலியானது.
இதனையடுத்து, இந்த பொறுப்பு யாருக்கு கொடுக்கப்படும் எனக் கேள்வி எழுந்தது. மேலும், இந்த பொறுப்புக்கு சி.டி.ரவி, அரவிந்த் லிம்பவலி ஆகியோர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார்.
தக்ஷின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த நளின் குமார் கட்டீல் பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்தவர். இவரை தலைவராக தேர்ந்தேடுத்திருப்பது கட்சியின் மூத்தத் தலைவர்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.