கேரளாவின் காசராகோடு நகரில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாவட்டக் குழு அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில அரசு போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை என்று விமர்சித்தார்.
இது குறித்து பேசிய அவர், "கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, தனிமைப்படுத்தும் முகாம்களில் பொதுமக்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், உண்மையான நிலை அவ்வாறு இல்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வயநாட்டிலுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். தனியார் நிறுவனங்களுக்கும் கேரளாவில் அரசியல் ஆதரவு வழங்கப்பட்டுவருகிறது. மேலும், கரோனா தொடர்பான மருத்துவ தரவுகளை கேரள அரசு முறையாகப் பாதுகாக்கவில்லை" என்றார்.
தொடர்ந்து மாநில அரசையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் விமர்சித்துப் பேசிய அவர், "முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக இருக்கிறது. இந்த அரசு வன்முறையை மட்டுமே விரும்புகிறது. சிபிஎம் நிதியுதவியால் நடத்தப்படும் வன்முறைகள் கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் தொடர்கிறது. இத்தகைய வன்முறை காரணமாக 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரள அரசில் நிதி முறைகேடு, பெண்கள் மீதான வன்முறை, வாரிசு அரசியல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. இதுபோன்ற பல பிரச்னைகளை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
இதுபோன்ற கட்சிகளை எதிர்த்து போராடி உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் பாஜகவை கேரள மக்கள் பாராட்ட வேண்டும். கேரளாவில் நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதே எங்கள் நோக்கம்.
கேரளாவின் 17 நகரங்கள் அம்ரித் தாரா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. மேலும்,எட்டு நதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் கேரளாவில் வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சித்துவருகிறோம்" என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மோடியின் ஆட்சியில்தான் சீனா ஆக்கிரமிப்பு செய்தது - ராகுல் காந்தி