மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், புதுச்சேரியில் நாளை 27ஆம் தேதி காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழ் கட்சி அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியினர் இன்று ஒவ்வொரு கடையாக ஏறிச்சென்று பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சிவக்குமார், "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடுவண் அரசுக்கு (புதுச்சேரி) மாநில அரசு எந்தவிதமாக அழுத்தமும் கொடுக்காத நிலையில், நாம் தமிழ் கட்சி சார்பில் 27ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தோம்.
எங்களைப் போலவே, காங்கிரஸ்-திமுக கூட்டணியும் போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால், கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக வணிகர்களின் பெயரைச் சொல்லி போராட்டத்தை திரும்பப்பெற்றுக்கொண்டது.
ஆனால், முன்பு அறிவித்தது போல நாம் தமிழர் கட்சி தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழர் தேசிய இயக்கம், சில இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க : இசைஞானி இளையராஜாவுக்கு 'ஹரிவராசனம்' விருது அறிவிப்பு