கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்களுக்குத் தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா கர்நாடகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இதையடுத்து மைசூரு அரண்மனை முதல் பன்னி மண்டபம் வரை யானை ஊர்வலம் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு மைசூரு, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தசரா விழாவை எளிமையாக நடத்தக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஜம்பு சவாரி (யானை) ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகளைத் தவிர்த்து பிற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது.
அதன்படி இன்று (அக்-26) தசரா விழாவின் சிறப்பம்சமாகக் கருதப்படும் ஜம்பு சவாரியை, முதலமைச்சர் எடியூரப்பா கொடியேற்றித் தொடங்கி வைத்தார். இதில், மைசூரு மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். வழக்கமாக 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, அரண்மனை வளாகத்திலேயே நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அத்துடன், கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தாண்டு நடைபெறும் விழாவில் கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநில அரசின் சாதனைகள் குறித்து பரப்புரை செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.